சப்-இன்ஸ்பெக்டர் தேர்விற்கான இலவச பயிற்சி
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 621 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு இணையதளம் வாயிலாக வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் 1.7.2023 அன்று 20 வயது நிறைவு பெற்றவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயதும், ஆதிதிராவிடருக்கு 35 வயது, திருநங்கைகளுக்கு 35 வயது, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் 20 சதவீதம் காவல்துறை ஒதுக்கீட்டில் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களுக்கு 47 வயதும், உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.