8,386 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது


8,386 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
x

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான ஒரு லட்சம் மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,368 பேருக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்.

கிருஷ்ணகிரி

மின்சார பெருவிழா

மின்சார அமைச்சகம், தமிழக அரசின் மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின்சார பெரு விழா பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதனை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் மின்சார பெருவிழா மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு செயல்பாட்டை எடுத்துக்காட்டவும், மின்வாரிய சாதனைகளை பறைசாற்றவும் உதவும் ஒரு தளமாகும்.

லடாக் முதல் கன்னியாகுமாரி வரையிலும், மற்றும் கட்ச் முதல் மியான்மார் எல்லை வரை அமைந்த இது உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் வினியோக கட்டமைப்பாகும். இந்த மின் வினியோக கட்டமைப்பின் உதவி கொண்டு நாம் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 1,12,000 மெகாவாட் மின்சாரத்தை அனுப்ப முடியும்.

நுகர்வோர் சேவை மையம்

2015-ல் கிராமப்புறங்களில் சராசரி மின் வினியோகம் 12.5 மணி நேரம் இருந்தது இப்போது சராசரியாக 22.5 மணி நேரங்கள் உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் ஓராண்டில் வழங்கப்பட்டுள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8,386 பயனாளிகளுக்கு (8 சதவிகிதம்) இலவச மின் வசதி வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9,72,180 அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன.

குக்கிராமங்களுக்கும் மின்சாரம்

மேலும் தொடர் நடவடிக்கை மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தியதன் விளைவாக 2017-18-ம் ஆண்டில் அனைத்து குக்கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு வழங்க முடிந்தது. மின்சாரம் தேவைக்கேற்ப உற்பத்தி செய்து அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தை வழங்குவது போல் மலை கிராம பகுதிகளில் தாழ்வுநிலை மின்னழுத்தம் இருப்பதை சரிசெய்து, ஒரே சீரான மின்சாரம் வழங்க பவர் கிரீடு மற்றும் மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, பொது மேலாளர் (பவர் கிரீடு) நிரஞ்சன் குமார், மனிதவள மேம்பாட்டு அலுவலர்.சரவணகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மின்சார வாரிய செயற்பொறியாளர்கள் முத்துசாமி, இந்திரா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்டராம கணேஷ், சுப்ரமணி, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் மற்றும் மின்வாரிய பணியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story