மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழகத்தில் வழங்கக்கூடிய இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்படும்: அமைச்சர் பேட்டி


மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழகத்தில் வழங்கக்கூடிய இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்படும்:  அமைச்சர் பேட்டி
x

மின்சார சட்ட திருத்த மசோதாவால் தமிழகத்தில் வழங்கக்கூடிய இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர்

பேட்டி

கரூரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் எந்த இடத்திலும் போதைப் பொருட்கள் இல்லாத அளவிற்கு முழுமையாக கட்டுப்படுத்தி கொண்டு வர வேண்டும் என்பதற்கு சீரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் இந்த போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக, இந்த முன்னெடுப்பை முதல்-அமைச்சர் எடுத்துள்ளார்.

இலவச மின்சாரம் பாதிக்கும்

மின்சார சட்ட திருத்த மசோதா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம், குடிசைகளுக்கான இலவச மின்சாரம் என முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அரசின் நிதி மற்றும் பல்வேறு கடன்களை பெற்று உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதுமாக தனியார் துறைக்கு எந்த வித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுப்பார்

அதிகமாக பயன்படுத்தக்கூடிய நுகர்வோர்களுக்கும், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளுக்கும் தனியார் துறையினர் அனுமதிகளை வாங்கி மின்சாரம் வினியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பார்கள். குறைந்த அளவு பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோர்களுக்கு தனியார் துறை மின்சாரம் வழங்கக்கூடிய நடவடிக்கைகளை எடுக்கமாட்டார்கள். மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறும் வரை தொடர்ந்து முதல்-அமைச்சர் அழுத்தம் கொடுப்பார்.கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஏரிகளும் கணக்கீடு செய்து ஆய்வு செய்யப்பட்ட பிறகு நிதிகளை வழங்கி உபரி நீர் அனைத்து பெரிய குளங்களுக்கும் செல்வதற்கான பணிகள் நிச்சயம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story