மாமல்லபுரத்தில் வாகன நுழைவு கட்டண காலம் முடிந்ததால் சுற்றுலா வாகனங்களுக்கு இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் வாகன நுழைவு கட்டண காலம் முடிந்ததால் சுற்றுலா வாகனங்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
நுழைவு கட்டணம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் கார், வேன், பஸ் போன்ற தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலா வாகனங்களுக்கு மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை நுழைவு கட்டணம் வசூவிக்க பேரூராட்சி நிர்வாகம், பேரூராட்சி மன்றத்தின் ஒப்புதலுடன் பொது ஏலம் நடத்தி தனியாரிடம் ஓராண்டு உரிமம் வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க கடந்த ஆண்டில் பொது ஏலம் நடத்தி தனியாருக்கு ரூ.94 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதையடுத்து ஏல நிர்ணய காலம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிந்து விட்டதால் மறு ஏலம் இன்னும் நடத்தப்படவில்லை.
கட்டணம் வசூலிக்கப்படவில்லை
தனியார் பொது ஏல காலம் முடிந்தாலும் பேரூராட்சி நிர்வாகம், பொது ஏலம் விடும்வரை கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் உள்ளாட்சித்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் இருந்து முறையான அறிவிப்பு வராததால் இன்னும் வாகன வரி வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா வந்த வாகனங்கள் அனைத்தும் இலவசமாக மாமல்லபுரம் நகருக்குள் வந்து செல்வதை காண முடிந்தது.
குறிப்பாக சுற்றுலா வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாததால் மாமல்லபுரம் நகரத்தில் உள்ள வாகன கட்டண மையங்களான பூஞ்சேரி நுழைவு வாயில் மற்றும் கோவளம் சாலை நுழைவு வாயில் என இரண்டு பகுதிகளில் வாகனங்கள் எதுவும் அணிவகுத்து நிற்காமல் நேரடியாக மாமல்லபுரம் வந்ததால் நேற்று அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.