இலவசம் கொடுப்பது பணக்காரனையும், ஏழையையும் சமன்படுத்துகிற ஒரு முயற்சிதான்


இலவசம் கொடுப்பது பணக்காரனையும், ஏழையையும் சமன்படுத்துகிற ஒரு முயற்சிதான்
x

இலவசம் கொடுப்பது பணக்காரனையும், ஏழையையும் சமன்படுத்துகிற ஒரு முயற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என மணலூர்பேட்டையில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

விலையில்லா சைக்கிள்

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ்-1 படித்து வரும் 17 ஆயிரத்து 892 மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரிபெருமாள், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வடிவுக்கரசிசாமிசுப்பிரமணியன், மணலூர்பேட்டை பேரூராட்சி தலைவர் ரேவதிஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

இறைவனுக்கு நிகராக

ஆசிரியர்களை மாணவர்கள் இறைவனுக்கு நிகராக உணர வேண்டும். அவர்கள் மாணவ சமுதாயத்திற்கு நல்வழி காட்டுபவர்கள் ஆவர். நான் ஒரு காலத்தில் ஆசிரியர் சொன்னதை மட்டுமே கேட்டேன். அதனால் தற்போது உங்கள் முன் அமைச்சராக நிற்கிறேன். ஆசிரியர் சொல்வதை கேட்ட அனைவரும் வாழ்வில் உன்னத நிலைக்கு முன்னேறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

தமிழக முதல்-அமைச்சர் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் இலவச திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். ஆனால் இதை சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இலவசம் கொடுப்பது பணக்காரனையும், ஏழையையும் சமன்படுத்துகிற ஒரு முயற்சி தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்னும் எத்தனையோ குடும்பத்தினர் அரசின் உதவியால் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இது மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பல இலவச திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறார். அப்போதுதான் சமத்துவமான சமூக நீதியை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மணலூர்பேட்டை நகர தி.மு.க. செயலாளர் வக்கீல் ஜெய்கணேஷ், நகர முன்னாள் செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் பாரதிதாசன் பெருமாள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜிபூபதி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சைய்யத் அலி, அம்மு என்கிற ரவிச்சந்திரன், மேலந்தல் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை ஆசிரியர்கள் விஜயலட்சுமி, செல்லப்பன் ஆகியோர் நன்றி கூறினா். நிகழ்ச்சியை மாவட்ட கல்வி அலுவலர்கள் சாந்தி, கலைச்செல்வன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.


Next Story