காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டால்தான் சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர முடியும்; கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு


காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டால்தான் சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர முடியும்; கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டால்தான் சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர முடியும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

திருச்சி

சமூக அறிவியல் மாநாடு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 46-வது இந்திய சமூக அறிவியல் மாநாடு 'இந்திய சுயராஜ்யம் 75 ஆண்டுகள்' என்ற மைய கருப்பொருளை கொண்டு நேற்று காலை தொடங்கியது. மாநாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வரவேற்றார்.

இந்திய சமூக அறிவியல் கழகத்தின் தலைவர் பழனிதுரை தலைமை தாங்கினார். மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று, மாநாட்டு மலரை வெளியிட்டு பேசியதாவது:-

சுயராஜ்ஜியம்

காலனி ஆதிக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் கலாசார பண்பாடு மிகவும் உயர்ந்த நிலையில் இருந்ததை நாம் அனைவரும் அறிவோம். பிரிட்டீஷ் காலனியம் இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார பண்புகளை அவர்களது தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து, கல்விமுறை, பொருளாதாரம் மற்றும் இதர தளங்களில் தலையீடு செய்தது. அதனை தற்போது மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதற்கான ஆதாரங்களை ஆவணக் காப்பகங்களில் காணலாம்.

பூரண சுயராஜ்ஜியம் என்பதன் பொருளை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ஜியத்தை உணர வேண்டும் என்றால் காலனிய அடிமை மனநிலையில் இருந்து விடுபட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்துக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் அவரவர் துறையில் வினை ஊக்கிகளாக இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு

மாநாட்டில் இந்திய சமூக அறிவியல் கழகத்தின் பொதுச்செயலாளர் சாம்பசிவராவ், பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் மற்றும் சமூக அறிவியல் நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக யு.ஜி.சி. மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 450 சமூக அறிவியல் நிபுணர்கள் சிறப்பு தலைப்புகளில் சொற்பொழிவாற்றவும், ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்கவும் பதிவு செய்துள்ளனர். இந்த மாநாடு வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story