கரிக்கலாம்பாடி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம்
கரிக்கலாம்பாடி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கரிக்கலாம்பாடி கிராமத்தில் இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கரிக்கலாம்பாடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கரிக்கலாம்பாடி கிராம ஊராட்சி ஒன்றிய குழு இணைந்து சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச சட்ட உதவிகள் முகாமை நடத்தியது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஆகியவை குறித்தும் சட்ட விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். ஒன்றியக் குழு உறுப்பினர் நீலந்தாங்கல் அனுராதா சுகுமார் முன்னிலை வகித்தார். கரிக்கலாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் வரவேற்றார். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி, திருவண்ணாமலை பார் அசோசியேஷன் இணைசெயலாளர் வக்கீல் கோமளவள்ளி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் தனஞ்செயன் ஆகியோர் பொதுமக்கள் சட்ட விழிப்புணர்வு பெறவும், வழக்குகளில் நேரடியாக கோர்ட் முறையில்லாமல் மாற்று முறைகளில் தீர்வு காண்பது குறித்து விளக்கங்கள் பெறுவது, பெண்கள், குழந்தைகள் உரிமைகள், மக்கள் நீதிமன்றம், நுகர்வோர் சட்ட பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள், கடமைகள் போன்றவை குறித்து விரிவாக விளக்கிப் பேசினர்.
இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பஞ்சாமிர்தம் திருமலை, வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு திருவண்ணாமலை முதுநிலை நிர்வாக உதவியாளர் கோட்டீஸ்வரன் நன்றி கூறினார்.