இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஏழைகள் பயன்பெற வேண்டும்- ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தல்


இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஏழைகள் பயன்பெற வேண்டும்- ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தல்
x

இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தி பேசினார்

மதுரை


இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வலியுறுத்தி பேசினார்.

சட்ட உதவி மையம்

மதுரையில் பைகஸ் என்ற இலவச சட்ட உதவி மைய தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்று, சட்ட உதவி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- ஏராளமானவர்கள் உரிய சட்ட உதவிகள் கிடைக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அரசும், கோர்ட்டும் மட்டுமே இலவச சட்ட உதவி அளிக்கும் என எதிர்பார்க்க முடியாது. இது போன்ற சட்ட உதவி மையங்கள் ஏழை, எளிய மக்களுக்கு முறையான உதவிகளை செய்ய வேண்டும். அந்த வகையில் இந்திய நாட்டின் பிறந்த நாளான சுதந்திர தினத்தன்று இந்த இலவச சட்ட உதவி மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

வெற்றிகரமாக தொடங்கப்பட்டு உள்ள இந்த இலவச சட்ட உதவி மையம், சமுதாயத்தில் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை திறம்பட கையாள வேண்டும். அதன்மூலம் நல்லமுறையில் செயல்பட்டு, இந்த மையத்தின் 25-ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியிலும் நானே சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்.

ஏழைகள் பயன்

வழக்கறிஞர் தொழிலையும், இலவச சட்ட உதவி மையத்தின் பணிகளையும் வெவ்வேறு பாதையில் கொண்டு செல்வது அவசியம். இந்த மையத்தின் வாயிலாக திறமையான வக்கீல்களை உருவாக்க வேண்டும். சட்டரீதியான நடவடிக்கைகள் இலவச சட்ட உதவி தொடர்பான தகவல்களை தொகுத்து அச்சிட்டு வழங்குவதை வழக்கமாக கொள்ளுங்கள். பணவசதி படைத்தவர்கள் சட்டத்தை எளிதில் அணுகிவிடுவார்கள். ஏழைகளுக்கு அது கடினம். தகுதியான ஏழை, எளியோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் சட்டரீதியான உரிமைகளை பெறுவதற்கு உதவுவது அவசியம். அதற்காக நான் உள்பட அனைவரும் பல்வேறு உதவிகளை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பைகஸ் இலவச சட்ட உதவி மைய தலைவர் ஆண்டிராஜ் வரவேற்றார். நாட்டிலேயே முதல் முறையாக கோர்ட்டு சார்ந்திராத இலவச சட்ட உதவி மையம் தொடங்கப்படுவது இதுதான் என்று பெண்கள் வக்கீல் சங்கத் தலைவி ஆனந்தவள்ளி, வக்கீல் சாமித்துரை, மதுரை சட்டக் கல்லூரி முதல்வர் குமரன், மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். மூத்த வக்கீல் சுபாஷ் பாபு, வக்கீல்கள் எஸ்.வினோத், அன்பரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story