மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
கபிலர்மலையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை வட்டார வள மையத்தின் உள்ளடங்கிய கல்வித் திட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் கபிலர் மலையில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை மெகருநிஷா முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் கவிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 18 வயதுள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பார்வையின்மை, குறைப்பார்வை, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாமை, உடலியக்க குறைபாடு, அறிவு திறன் குறைபாடு, மனநோய், மூளை முடக்க வாதம், தசை சிதைவு நோய், மூளை நரம்பு சார்ந்த குறைபாடு, கற்றல் திறன் குறைபாடு, விழி திசு குறைபாடு, பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு உள்ளிட்ட குறைபாடு கொண்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமில் அடையாள அட்டை, தேசிய உதவி உபகரணங்கள் பெறுவதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமையத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.