அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை
புதிய மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசு, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய நல்வாழ்வு மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.300 அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021-ஐ செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 1.9.2021 முதல் எம்.டி. இந்தியா மற்றும் மெடி அசிஸ்ட் என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் மூன்றாம் நபர் ஒப்பந்தம் செய்து இத்திட்டத்தை செயல்படுத்த பொறுப்பு வழங்கியுள்ளது. இதனால் சிகிச்சை செலவுத் தொகையை பெறுவதில் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அரசாணைக்கு முரண்பாடான இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.தமிழக அரசின் புதிய நல்வாழ்வு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.