அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
x

அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, கடந்த 2018-ம்ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறைசார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கொரோனா பரவலால் இணையவழியில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. நடப்பாண்டு நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி முறையில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, பயிற்சி வகுப்புகள் நவ.26-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு வட்டாரத்துக்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,980 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மையத்திலும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் இருந்து 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் பயிற்சியில் பங்கேற்பார்கள்.

வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரைபயிற்சி அளிக்கப்படும். சென்னையில் மட்டும் 10 மையங்களில் 700 பேருக்கு பயிற்சி தரப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நீட் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக முதுநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பாடக்குறிப்புகள் தமிழக அரசால் வழங்கப்படும். மேலும், நிபுணர்கள் மூலமும் காணொலி காட்சி வாயிலாக சிறப்புப் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டு வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story