ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி-மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச உடல் பரிசோதனை


ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி-மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச உடல் பரிசோதனை
x

ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி-மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை அட்டையை பயனாளிகளுக்கு ஜெகத்ரட்சகன் வழங்கினார்.

சென்னை

சென்னை குரோம்பேட்டையில் தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியும், அரக்கோணம் தொகுதி எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் நிறுவிய ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி-மருத்துவமனை அமைந்துள்ளது.

தனியார் ஆஸ்பத்திரிகளில் கிடைக்கும் உயர்தர முழு உடல் பரிசோதனை ஏழை-எளிய மக்களுக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் அவர்களுக்கு உடல் பரிசோதனைக்கான குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை இந்த கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி ஏழை-எளிய மக்களுக்கு இலவச உடல் பரிசோதனை செய்துக் கொள்வதற்கான அட்டை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் ஜெகத்ரட்சகன், அவரது மகளும், தலைவருமான டாக்டர் ஜெ.ஸ்ரீநிஷா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இந்த அட்டையை வழங்கினார்கள்.

விழாவில் மருத்துவக்கல்லூரியின் டீன் டாக்டர் டபிள்யூ.எம்.எஸ்.ஜான்சன், மருத்துவ இயக்குனர் டாக்டர் டி.ஆர்.குணசேகரன், ஆலோசகர் டாக்டர் ஆர்.வீரபாகு, பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதிவாளர் டாக்டர் எஸ்.பூமிநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி.சசிகுமார், தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜி.எஸ்.பிரபுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இலவச முழு உடல் பரிசோதனைக்கான குடும்ப அட்டை பெறும் நபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மருத்துவமனையில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் சேருவதற்கு வருவாய் சான்றிதழ், ரேஷன் அட்டை, அடையாள சான்றுக்கு ஆதார் அட்டை ஆகியவற்றை மருத்துவமனைக்கு எடுத்து வரவேண்டும் என்றும், இலவச உடல் பரிசோதனை செய்வதற்கு 1800 599 9600 என்ற எண்ணில் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீபாலாஜி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் டி.ஆர்.குணசேகரன் கூறியதாவது:-

'ஆல் இன் ஒன் ஸ்மார்ட் பாடி அனலைசர்' சாதனத்தின் மூலம் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் அனைத்து பரிசோதனைகளும் செய்யப்படும். எனவே பரிசோதனைக்காக ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறி, மாறி செல்ல வேண்டிய சிரமம் இல்லை.

இந்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் பணியாற்றும் 2 ஆயிரத்து 500 பணியாளர்கள் இந்த இலவச பரிசோதனை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் ஏழை-எளிய மக்களுக்கும் இந்த இலவச முழு உடல்பரிசோதனை அட்டை திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story