சிறுபான்மை மாணவர்களுக்கான இலவச கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது-கே.நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்


சிறுபான்மை மாணவர்களுக்கான இலவச கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது-கே.நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான இலவச கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என மத்திய மந்திரியிடம் கே.நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான இலவச கல்வி உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என மத்திய மந்திரியிடம் கே.நவாஸ்கனி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

கோரிக்கை மனு

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, சிறுபான்மை நலத்துறை மத்திய மந்திரி ஸ்மிருதி ராணிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இதில் 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி தொகையை .கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி நடுநிலை கல்வி வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. 9,10-ம் வகுப்பு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த இலவச கல்வி உதவித்தொகையானது மாணவர்களின் கல்விக் கட்டணங்களை மட்டும் சார்ந்தது அல்ல என சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இணையதள முன்னுரையே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை பெற்றோர் அனுப்புவதை ஊக்குவிப்பதற்காகவும், பள்ளி கல்விக்கான நிதி சுமையை குறைத்து பள்ளிக்கல்வியை முழுமைப்படுத்த உதவுவதற்காகவும், சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வியை உறுதி செய்வது உள்ளடக்கி இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அந்த இணையதளம் தெளிவுப்படுத்துகிறது.

கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்

எனவே இந்த உதவித்தொகையானது கல்வி கட்டணத்திற்கு மட்டுமான உதவித்தொகையாக நிச்சயமாக பார்க்க முடியாது. கல்விகட்டணத்தையும் தாண்டி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போக்குவரத்து, உணவு, சீருடை, கல்விச்சுற்றுலா உள்ளிட்ட இதர செலவுகளுக்கு தங்களுடைய வருமானத்தில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. உணவு, சீருடை உள்ளிட்டவை அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்குவது நடைமுறையில் இருந்தாலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்படி ஒரு நிலை இல்லை.அரசு பள்ளி மாணவர்களுக்கும் அது அல்லாத பல்வேறு செலவினங்கள் உள்ளன. சிறுபான்மை மாணவர்கள் கல்வி, பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளார்கள் என்பதினை சச்சார் குழுவின் அறிக்கைகள் அரசிற்கு தெளிவுபடுத்தி உள்ளன. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009-ஐ சுட்டிக்காட்டி 1-ம் முதல் 8-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை நிறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் தங்களது முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மீண்டும் 1-ம் முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story