விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இலவச தையல் எந்திரம்கலெக்டர் தகவல்
விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் இலவச தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோருக்கு மட்டும் இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள், அரசு இ-சேவை மையங்கள் மூலம் இணையதளவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தகுதி, வயது வரம்பு
இதற்கு வருமானச்சான்று (ஒரு வருடத்திற்குள் தாசில்தாரிடமிருந்து பெற்றது), ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல், பிறந்த தேதி சான்றிதழ், வயது வரம்பு 20-40-க்குள் (கல்வி சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை), விதவையாயின் (விதவை சான்று- தாசில்தாரிடமிருந்து பெற்றது), கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று (தாசில்தாரிடமிருந்து), மாற்றுத்திறனாளி சான்று, தையல் பயிற்சி சான்று (குறைந்தது 6 மாத கால பயிற்சி முடித்திருக்க வேண்டும்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, சாதி சான்றிதழ் (தாசில்தாரிடமிருந்து), ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகிய சான்றுகளுடன் அரசு இ-சேவை மையங்களில் இணையதள வழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.