பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் ; தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்
காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் பெண்களுக்கு இலவச தையல் எந்திரங்களை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் வழங்கினார்.
பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாள் விழா, ராகுல் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் சந்திப்பு சிந்துபூந்துறையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்கள்.
பதவியை விரும்பாதவர்
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பேசுகையில், ''காமராஜர் படிக்காத மேதை, அவர் சிறுவயதிலேயே காங்கிரஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். பதவியை ஒருபோதும் அவர் விரும்பாதவர். ஆனால் விருதுநகர் பெருந்தலைவர், முதல்-அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என பதவிகளை அலங்கரித்தார். 2 முறை பிரதமர் பதவி தேடி வந்த போதும் விரும்பாதவர். இந்திரா காந்தி உள்ளிட்டோரை பிரதமராக கொண்டு வந்தார்.
தமிழ்நாட்டுக்கு பல அணைக்கட்டுக்களையும், மின் திட்டங்களையும், தொழில் வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தினார். அதனால் தமிழகம் முன்னேறியது. நேருவிடம் எண்ணற்ற திட்டங்களை கேட்டு பெற்றுத்தந்தார். காமராஜரோடு பழகிய காலத்தை நான் பெருமையாக கருதுகிறேன். அவரால் நான் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன் என்பதே பெருமை ஆகும். மாணவர் காங்கிரஸ் சார்பில் அவரை அழைத்து வந்து 3 மாநாடுகளை நடத்தி உள்ளோம். காமராஜரின் புகழ் மேலும் மேலும் ஓங்க வேண்டும், வளர வேண்டும்'' என்றார்.
அவரது வழியில்....
மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ''தமிழகத்தில் சிறிய கிராமத்தில், விருதுபட்டியில் பிறந்து தொடக்க கல்வியில் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர் முதலில் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தினார். பின்னர் தொழில், விவசாய புரட்சிகளை ஏற்படுத்தினார். காமராஜர் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாகின. தமிழகத்தில் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்ட கல்லணைக்கு பிறகு காமராஜர் ஆட்சி காலத்தில் தான் மிகப்பெரிய அணைகள் கட்டப்பட்டன. தமிழக முதல்-அமைச்சர் உட்பட பெரிய உயர் பதவிகளை வகித்த போதும் அவர் பெயரில் சொத்துக்கள் எதுவும் இருந்ததில்லை. எனவே அவரது வழியில் நடக்க வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.