கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் இலவச திறன் பயிற்சி


கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் இலவச திறன் பயிற்சி
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் இலவச திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

தேனி

கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் இலவச திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

திறன் பயிற்சி

தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் பயிற்சியானது தமிழ்நாடு கட்டுமான கழகம், 'எல் அண்டு டி' கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து அளிக்க உள்ளது. 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சி பெறலாம். வயது வரம்பு 18 வயதில் இருந்து 40 வயது வரை இருக்கலாம்.

இதில், கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை, சாரம் கட்டுபவர் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும்.

சான்றிதழ்

அதேபோல் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சியும், தமிழ்நாடு கட்டுமான கழகம், கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து அளிக்க உள்ளது. இந்த பயிற்சி செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அத்துடன் 3 ஆண்டுகள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

இதில், கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை, சாரம் கட்டுபவர் போன்ற பயிற்சி வழங்கப்படும். அத்துடன், பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய நாள் ஒன்றுக்கு ரூ.800 வழங்கப்படும். பயிற்சி நிறைவில் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சி வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி முதல் தொடங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தேனி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story