மாணவர்களுக்கு வழங்க இலவச பாடபுத்தகங்கள் தயார்
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க இலவச பாடபுத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, மதுக்கரை உள்ளிட்ட தாலுகா பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து, வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டில் வழங்கப்பட வண்டிய இலவச பாடபுத்தகங்கள் அனைத்தும், தமிழ்நாடு பாடநூல்கழகம் மூலம் அச்சிடப்பட்டு, அந்தந்த கல்வி மாவட்டம் வாரியாக வினியோகிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதிபள்ளி, ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்க உள்ள மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுவதற்காக, அனைத்து பாடத்திட்டங்களுக்கான புதிய புத்தகங்கள் வந்துள்ளன. இந்த புத்தகங்கள் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தனித்தனி அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் அந்தந்த ஒன்றிய வட்டார கல்வி அலுவலக கட்டுப்பாட்டில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் வால்பாறை தாலுகாவிற்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியாக, இன்னும் ஒருசில நாட்களில் புத்தகங்கள் அனுப்பப்படும். பின்னர் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பாடபுத்தகம் வழங்கப்படும்.
இந்த தகவலை கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.