ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு


ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
x

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்

மதுரை

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நட்சத்திர விடுதிகள்

சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனம், மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமையபெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். இந்த நிறுவனம், சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்கன் கவுன்சில் ஆப் பிசினஸ் மூலம் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள லிசி நிகோலஸ் கேட்டரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. ஓட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியூட் சர்வே 2022-ன்படி உலகளாவிய மனிதவள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. சி.இ.ஓ வோல்ர்டு நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் இந்த நிறுவனம் இடம் பெற்றுள்ளது.

இந்த புகழ் பெற்ற நிறுவனத்தில் பிளஸ்-2 வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பி.எஸ்.சி. ஓட்டல் மேலாண்மை (B.Sc Hospitality, Hotel Administration) என்ற 3 வருட முழுநேர பட்டபடிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma Food Production) பட்டயப் படிப்பு. மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் (Craftmanship Course in Food Production, Patisserie) படிப்பில் சேர்ந்து படிக்கலாம். படிப்பு முடித்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்று தரப்படும்.

குடும்ப வருமானம்

இங்கு சேருவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்கு இருக்க வேண்டும். பி.எஸ்.சி. படிப்பில் சேர NCHM JEE-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். அதில் NCHM JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 27-ந் தேதி கடைசி நாளாகும். இந்த படிப்பிற்காக செலவுகள் தாட்கோ ஏற்று கொள்ளும். இந்த படிப்புக்கு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். அதன்பின் திறமைக்கு ஏற்ப ரூ.70 ஆயிரம் வரை திறமைக்கேற்ப சம்பளம் பெறலாம். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story