அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்தால் 'ஷேர்' ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா?


அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்தால்  ஷேர் ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா?
x
தினத்தந்தி 15 Oct 2022 12:15 AM IST (Updated: 15 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயண திட்டத்தால் ‘ஷேர்’ ஆட்டோக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பொதுமக்கள், டிரைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, நெல்லை மாநகர மக்கள் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் ரெயில் போக்குவரத்துக்கு அடுத்தபடியாக ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களை தான் பயணத்துக்கு பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது என்றே சொல்லலாம்.

இலவச பயணம்

டவுன் பஸ் போன்று இங்கு தான் நிறுத்த வேண்டும் என்ற வரைமுறை, கட்டுப்பாடுகள் ஷேர் ஆட்டோக்களுக்கு கிடையாது. இதனால் பொதுமக்கள் நிற்க சொல்லும் இடத்தில் எல்லாம் நின்று செல்கிறது. இது பொதுமக்களுக்கு வசதியாக உள்ளது. இதனால் ஷேர் ஆட்டோக்கள் பரபரப்பாக இயங்கி வந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்த பிறகு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இது பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் ஒருசில தேவையற்ற பயணங்களை பெண்கள் மேற்கொள்ளும் நிலையையும் உருவாக்கி உள்ளது. இலவச பயண திட்டம் வந்தாலும் அவசரமாக அலுவலகம் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டிய பெண்கள் ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களையே நம்பி இருக்கிறார்கள். சிலநேரம் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் அதிகமாகவும் காணப்படுகிறது.

ஷேர் ஆட்டோக்கள்

நெல்லை மாநகரில் கடந்த 2002-ம் ஆண்டு ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில் நெல்லை சந்திப்பில் இருந்து தச்சநல்லூர் பகுதிக்கு 25 ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. டவுன் மேலரதவீதியில் இருந்து தச்சநல்லூருக்கு நேரடி பஸ் வசதி கிடையாது. அந்த வழித்தடத்தில் 5 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஐகிரவுண்டுக்கு நேரடியாக பஸ் கிடையாது. தற்போதுதான் புதிதாக ஒரு வழித்தட பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் 25 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. மாநகரில் மொத்தம் 50 ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இதுதவிர நெல்லை சந்திப்பில் இருந்து மேலப்பாளையம் மற்றும் பல்வேறு வழித்தடங்களில் பயணிகள் ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போன்று கட்டணம் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. இதுவும் மக்கள் பயன்பாட்டில் வரவேற்புக்கு உரியதாகவே உள்ளது.

தொழில் பாதிப்பு?

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கொண்டு வரப்பட்டதற்கு ஆட்டோ டிரைவர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

இலவச பயண திட்டத்தால் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ டிரைவர்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

விலைவாசி உயர்வு

நெல்லையை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் ராஜன்:-

பெண்களுக்கு இலவச பயணம் வந்த பிறகு, பெண்கள் சவாரி வெகுவாக குறைந்து விட்டது. இதனால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், நெல்லையில் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்ட பணிகளுக்கான ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதால் டயர் தேய்மானமும் அதிகமாகிறது. டீசல், பெட்ரோல், சமையல் கியாஸ் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம்.

ஷேர் ஆட்டோ டிரைவர்களுக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்கள், சலுகைகள் அரசு அறிவிக்க வேண்டும். முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.600 வரை சம்பாதிக்க முடிந்தது. ஆனால் தற்போது ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே கிடைக்கிறது. ஷேர் ஆட்டோக்களில் பெண்கள் அவசர தேவைக்கு மட்டுமே பயணிக்கிறார்கள். சந்திப்பு பகுதியில் இலவச பயண பஸ்கள் ஓடத்தொடங்கி விட்டால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தொழிலை நம்பி இறங்கி விட்டதால், தொடர்ந்து செய்து வருகிறோம்.

தச்சநல்லூர் ஷேர் ஆட்டோ டிரைவர் ரமேஷ்முருகன்:- பெண்களுக்கான இலவச பஸ் பயணம் ஷேர் ஆட்டோ தொழிலை கடுமையாக பாதித்து உள்ளது. இதனால் டிரைவர்களுக்கு வருமானம் குறைந்து விட்டது. நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பித்து கட்டப்பட்டு வருகிறது. இதனால் மழை, வெயிலில் சாலையோரத்தில் நின்று பயணிகளை அழைத்துச்செல்கிறோம். விரைவில் பஸ் நிலையம் திறக்கும்போது எங்களுக்கு தனி பிளாட்பாரம் அமைத்து கொடுக்க வேண்டும்.

பயணிகள்

ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் என்ன சொல்கின்றனர் என இனி பார்ப்போம். உடையார்பட்டி ராஜி:-

நெல்லை சந்திப்பில் இருந்து தச்சநல்லூர் செல்வதற்கு பஸ் வசதியே இல்லை. ஷேர் ஆட்டோவில் தச்சநல்லூருக்கு செல்ல ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் கட்டணத்தை விட ஷேர் ஆட்டோவில் சற்று கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள். மற்ற ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்தால் அதிக செலவு ஆகும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்குவதற்கு பதிலாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் என அனைவருக்கும் இலவச பஸ் பயணம் வழங்க வேண்டும்.

டவுனை சேர்ந்த இக்பால்:-

பெண்களுக்கு வழங்குவது போல் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பயணம் கொடுத்தால் நன்றாக இருக்கும். ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்கும் அரசு பெண் ஊழியர்களும் இலவசமாக அரசு பஸ்சில் பயணிக்கிறார்கள். இந்த முரண்பாடுகளை நீக்க வேண்டும்.

நெல்லை கரையிருப்பை சேர்ந்த மல்லிகா:-

நான் மும்பையில் வசித்து வருகிறேன். நாங்கள் ெசாந்த ஊருக்கு வரும்போது, அங்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதியாக உள்ளது.

தச்சநல்லூரை சேர்ந்த ரேவதி:-

ஷேர் ஆட்டோக்களில் சில நேரம் இடம் கிடைக்காமல் தொங்கி கொண்டு செல்கின்றனர். முதலில் சந்திப்பு பகுதிக்கு பஸ் இயக்க வேண்டும். டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பது நல்ல திட்டமாக இருந்தாலும், பஸ் குறிப்பிட்ட இடங்களில் நிற்பது இல்லை. ஓடிப்போய் ஏறுவதற்குள் பஸ்சை எடுத்து சென்று விடுகிறார்கள். அதேபோல் எங்களது பகுதியில் நிறுத்துமாறு கூறினால் நிறுத்த மறுக்கிறார்கள். அரசு டவுன் பஸ்கள் பயணிகளை பற்றி கவலைப்படுவது கிடையாது. அதனால் ஷேர் ஆட்டோவில் பணம் கொடுத்து செல்வதே மேலானதாக உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்த ஷேர் ஆட்டோ டிரைவர் செல்வம்:- தூத்துக்குடியில் டபிள்யூ.ஜி.சி. ரோடு வழியாக திரேஸ்புரம் வரையும், 3-வது மைல் பகுதியிலும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பு மக்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தனர். தற்போது அரசு பஸ்களில் மகளிர் பயணம் செய்ய இலவசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆட்டோ தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வந்தவர்கள், இலவச பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். 3-வது மைல் பகுதிக்கு ஷேர் ஆட்டோ இயக்குவதை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். தினமும் ரூ.1,000 வரை வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் எங்களின் சம்பளம் குறைந்து விட்டது. எங்கள் குடும்பத்தை நடத்தவே சிரமத்துக்கு ஆளாகி விட்டோம். ஆகையால் எங்களுக்கு மறுவாழ்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம்.


Related Tags :
Next Story