3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இலவச திருமணங்களை நடத்தி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, புதுமண தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் நெல்லை சந்திப்பில் உள்ள சாலைக்குமார சுவாமி கோவிலில் நேற்று காலை ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் மேயர் பி.எம்.சரவணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், மேலவாசல் பிரசன்ன விநாயகர் கோவில் கோவில்களிலும் தலா ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடத்தி, சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.






