இலவசங்கள் அவசியமா? பொதுமக்கள் கருத்து


இலவசங்கள் அவசியமா? பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 29 Oct 2022 6:45 PM GMT (Updated: 29 Oct 2022 6:46 PM GMT)

இலவசங்கள் அவசியமா என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர். இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூடாக காண முடிந்தது. பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன. இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இதுபற்றி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

சோம்பேறி ஆக்குகிறது

பாலமுருகன் (காரைக்குடி):- தமிழ்நாட்டில் மட்டும் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியினர் பொதுமக்களிடம் இலவசமாக பொருட்களை தருகிறோம். இலவச பயணம் என எல்லாம் இலவசத்தை வழங்கி வருவதால் அந்த வரிச்சுமை எல்லாம் அரசிற்கு வருவதில்லை. அதற்கு பதிலாக சாமானிய மக்களின் தலையில் வந்து விழுகிறது. இவ்வாறு இலவசம் அறிவிப்பதால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் உயர்கிறது. ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டுமானால் இலவசத்தை தவிர்க்கக வேண்டும். மக்களுக்கு இலவசத்தை வழங்குவதால் அவர்கள் சோம்பேறியாகி விடுகின்றனர். என்னை பொறுத்தவரை அரசு இலவசத்தை கொடுப்பதற்கு பதிலாக நல்ல திட்டங்களை கொடுத்தால் நன்று.

அம்பலம் ராவுத்தர் நெய்னார் (இளையான்குடி):- இலவசம் என்ற சொல்லானது மக்களை சோம்பேறித்தனத்தை கொடுக்கும் சொல்லாகும். ஒரு நாட்டில் கல்வி மட்டுமே இலவசமாக மக்களுக்கு வழங்கலாம். ஆனால் மற்ற பொருட்களை வழங்கினால் அந்த நாடு கடன்கார நாடாக மாறிவிடும். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டுமானால் அந்த நாட்டின் நல்ல கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும். எனவே அரசியல் கட்சியினர் இனி வரும் காலங்களில் மக்களுக்கு இலவச பொருட்களை வழங்காமல் நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல திட்டங்களை வழங்க வேண்டும். இவ்வாறு கொடு்த்தாலே அடுத்தாண்டே நாடு வல்லரசா மாறிவிடும்.


Next Story