அரசு விழாவுக்கு தடையாக இருந்ததாக வழக்கு:முன்னாள் ஒன்றியகுழு தலைவர் உள்பட 11 கரும்பு விவசாயிகள் விடுதலை


அரசு விழாவுக்கு தடையாக இருந்ததாக வழக்கு:முன்னாள் ஒன்றியகுழு தலைவர் உள்பட 11 கரும்பு விவசாயிகள் விடுதலை
x

அரசு விழாவுக்கு தடையாக இருந்ததாக வழக்கு: முன்னாள் ஒன்றியகுழு தலைவர் உள்பட 11 கரும்பு விவசாயிகள் விடுதலை செய்து நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

நாமக்கல்

மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 18.11.2017 அன்று நடைபெற்ற, கரும்பு அரவை தொடக்க விழா மற்றும் சுமார் ரூ.9 கோடி மதிப்பீட்டில் எரிசாராய ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் தொடக்க விழா நடந்தது. இதில் அப்போதைய அமைச்சர்கள் தங்கமணி, சம்பத் மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆலைக்கு கரும்பு சப்ளை செய்யும் கரும்பு விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் முன்னாள் தலைவர் நவலடி, குப்புதுரை, எட்டிக்கண், ராஜாகண்ணன், ராமலிங்கம், கதிர்வேல், பொன்னுசாமி, சேகர், பெருமாள், ராமசாமி, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கரும்பு சக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இணை மின்நிலையத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது உள்ளிட்டவைகள் குறித்து தொடர்பாக பேச அனுமதி கேட்டனர். அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கரும்பு விவசாயிகள் 11 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் கரும்பு விவசாய சங்க பிரதிநிதிகள் 11 பேர் மீதும் அரசு நிகழ்ச்சிக்கு தடையாக இருந்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 11 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் 6 ஆண்டுகளாக இந்த வழக்கு நாமக்கல் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் நவலடி உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு விஸ்வநாதன் உத்தரவிட்டார்.


Next Story