எல்பின் நிறுவன சொத்துகள் முடக்கம்


எல்பின் நிறுவன சொத்துகள் முடக்கம்
x
தினத்தந்தி 5 July 2023 7:20 PM GMT (Updated: 6 July 2023 11:09 AM GMT)

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவன சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருச்சி

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிறுவன சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சொத்துகள் முடக்கம்

திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி மன்னார்புரத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த எல்பின் இ.காம் பிரைவேட் லிமிடெட், ஸ்பாரோ குளோபல் டிரேட் நிறுவனங்கள் சம்பந்தமாக இதுவரை 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சம்பந்தமாக இதுவரை 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களின் பெயரிலும், நிறுவனத்தின் பெயரிலும் உள்ள சுமார் 257 சொத்து கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2 சொகுசுகார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

எல்பின் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடியாக பெறப்பட்ட பணத்தை தேர்தலுக்கு செலவு செய்ய கொண்டு செல்லப்பட்ட பணம் என கண்டறியப்பட்டு, அந்த பணம் முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

எல்பின் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் முதலீட்டாளர்களின் பணத்தில் இருந்து வாங்கிய அசையா சொத்துக்கள் கண்டறியப்பட்டு அவை முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்பின் நிறுவன வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுநாள் வரை புகார் அளிக்காத நபர்கள், பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களுடன் சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளிக்கலாம்.

மேலும், பொதுமக்களிடம் இருந்து ஏமாற்றிய பணத்தில் எல்பின் நிறுவனத்தினர் புதிதாக அசையா சொத்துகள் ஏதேனும் வாங்கி இருப்பின் அது குறித்து தகவல்களை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் இயங்கி வரும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அதிக லாபம் கொடுப்பதாக ஆசை வார்த்தைகளோடு வாக்குறுதி அளிக்கும் போலி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story