அடிக்கடி முடங்கும் செல்போன் சேவை
திருவெண்காடு, பூம்புகார் பகுதியில் அடிக்கடி முடங்கும் செல்போன் சேவையால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு, பூம்புகார் பகுதியில் அடிக்கடி முடங்கும் செல்போன் சேவையால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
செல்போன் கோபுரங்கள்
திருவெண்காடு, பூம்புகார் மற்றும் அதனை சுற்றி சுமார் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பூம்புகார் துறைமுகம், பள்ளிகள், கல்லூரி, வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேற்கண்ட ஊராட்சி பகுதிகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அந்த பகுதியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் மற்றும் இரண்டு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை முதல் மேற்கண்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
அடிக்கடி பாதிக்கப்படுகிறது
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், மத்திய திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இந்த செல்போன் சேவையை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த செல்போன் சேவை முடங்கும்போது அதை பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருவெண்காடு மற்றும் பூம்புகார் பகுதியில் அமைந்துள்ள தொலைதொடர்பு அலுவலகம் முன்பு வாடிக்கையாளர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.