தேனியில் புதிதாக அமைகிறது:ரூ.6 கோடியில் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்
தேனியில், ரூ.6 கோடியில் புதிதாக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இங்கு இறகுப்பந்து விளையாட்டுக்கான உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து மைதானம் போன்றவை அமைந்துள்ளன. இந்நிலையில் அங்கு புதிதாக பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது. அதற்காக கூடைப்பந்து மைதானம் அருகில் உள்ள காலி இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்தனர். அங்கு பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.5 கோடியே 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
49.4 மீட்டர் நீளம், 24.6 மீட்டர் அகலத்தில் இந்த உள்விளையாட்டு அரங்கம் அமைய உள்ளது. இறகுப்பந்து, கைப்பந்து, ஜிம்னாஸ்டிக், கபடி ஆகிய போட்டிகள் நடத்தும் வகையிலும், பயிற்சி அளிக்கும் வகையிலும் இந்த புதிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது.
தற்போது முதற்கட்ட பணிகளாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்க உள்ளன. மேலும், மாவட்ட விளையாட்டு அரங்கில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானம் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகவலை தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் தெரிவித்தார்.