வாலிபர் கொலையில் நண்பர் கைது
வடக்கன்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
வடக்கன்குளம்:
வடக்கன்குளம் அருகே வாலிபர் கொலையில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மகன் அஜித் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் கடந்த 14-ந்தேதி பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புதுகாலனி பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பழவூரைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் நாகராஜன் (22) என்பவர் அரிவாளால் அஜித்தை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜனை போலீசார் கைது செய்தனர்.
தாயாரை அவதூறாக பேசியதால்...
கைதான நாகராஜனிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, அஜித்தும், நாகராஜனும் கூலி தொழிலாளர்களாக ஒன்றாக வேலைக்கு சென்று வந்தனர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம்.
சம்பவத்தன்று பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புது காலனியில் அஜித், நாகராஜன் ஆகிய 2 பேரும் மது அருந்தினர். அப்போது மதுபோதையில் அஜித், நாகராஜனின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன் அரிவாளால் அஜித்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கைதான நாகராஜனை போலீசார் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.