அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் ராகுல்காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை


அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் ராகுல்காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை
x

ராகுல்காந்தி 4 நாட்கள் தமிழ்நாட்டில் பாத யாத்திரை செய்ய இருப்பதாக தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

சென்னை,

'இந்தியா அனைவருக்குமான நாடு' என்ற கோட்பாட்டை விளக்கி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறார். 150 நாட்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் செப்டம்பர் 7-ந் தேதி நடக்கிறது.

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாதயாத்திரையை தொடங்கும் இடம், பேசும் இடங்கள், மக்களை சந்திக்கும் இடங்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ராகுல்காந்தி தமிழக வருகை, பாத யாத்திரை பயணம் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் நேற்று கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மாவட்ட அளவில் பங்கேற்பு

இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார். மூத்த தலைவர் குமரி அனந்தன், எம்.பி.க்கள் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ.க்கள் செல்வ பெருந்தகை, பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனையின்போது, ராகுல்காந்தியின் பாத யாத்திரையின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து எத்தனை பேர் பங்கேற்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடமும் தினேஷ் குண்டுராவ் பாத யாத்திரையை எவ்வாறு வெற்றிகரமாக நடத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொதுச்செயலாளர் பி.வி.தமிழ்செல்வன், மாநில செயலாளர் செண்டில்மெண்ட் தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரியில் தொடக்கம்

இது குறித்து தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராகுல்காந்தி தலைமையில் பாதயாத்திரை பேரணி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ளது. இந்த பேரணி ஆனது செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்க உள்ளது. இந்தப் பேரணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறோம். இந்த பாத யாத்திரைக்காக 4 நாட்கள் தமிழகத்தில் ராகுல்காந்தி வர இருக்கிறார்.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு

இந்த பாதயாத்திரை பேரணி தமிழ்நாட்டில் 59 கிலோ மீட்டர் நடைபெற உள்ளது. அதற்கு பின்பு கேரளாவுக்கு சென்று, மீண்டும் தமிழகத்தில் நீலகிரி அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் நடைபயண பேரணி நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளை அழைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சி மேலிடம் முடிவு எடுக்கும். கண்டிப்பாக கூட்டணி கட்சிகளை அழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story