ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது
ஆனைமலையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு அம்பராம்பாளையம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அம்பராம்பாளையம் சுங்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, காருக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த ரமேஷ் (வயது 32) என்பது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் வாகனத்தில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்ல கூறியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரமேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து காருடன் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரின் உரிமையாளர் அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.