ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க., கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு


ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து  தி.மு.க., கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தேனி

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். மொத்தம் உள்ள 18 கவுன்சிலர்களில் 17 பேர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்களிடம் 32 தீர்மானங்கள் அடங்கிய நகல் வழங்கப்பட்டது. அப்போது தீர்மான நகலில் குறிப்பிட்டுள்ள வரவு, செலவு கணக்குகளை ஏற்க முடியாது, எனவே இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக கூறி தி.மு.க. கவுன்சிலர்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் 2 பேரும் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஆண்டிப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தலைவர் உள்பட 3 தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், ஒரு சுயேச்சை கவுன்சிலருடன் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. வசம் இருக்கும் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக அந்த கட்சி கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story