சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பிராட்வே, கடற்கரைக்கு பேருந்துகள் இயக்கம்


சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பிராட்வே, கடற்கரைக்கு பேருந்துகள் இயக்கம்
x
தினத்தந்தி 27 Aug 2023 6:27 AM GMT (Updated: 27 Aug 2023 6:48 AM GMT)

ரெயில் சேவை ரத்தால், பயணிகள் பாதிக்காத வகையில், சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்திலிருந்து பிராட்வே, கடற்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை,

எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ரூ.279 கோடி மதிப்பில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4 கி.மீ. புதிய ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

இதன் காரணமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே மேம்பால ரெயில்கள் இன்று முதல் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் வரை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரெயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், கடற்கரை - சிந்தாதிரிபேட்டை இடையே ரெயில் சேவை ரத்தால், பயணிகள் பாதிக்காத வகையில், சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பிராட்வே, கடற்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில் "பயணிகளுக்கு தடையின்றி பேருந்து சேவை கிடைக்க உரிய ஏற்பாடு செய்கிறோம். ஏற்கெனவே, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாக சென்ட்ரல், பாரிமுனை, திருவொற்றியூர், அண்ணாசதுக்கம், கடற்கரை நிலையம் வழியாக தினமும் 391 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமை (ஆக. 27) முதல் சென்ட்ரல், கோட்டை, சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தினமும் 140 பேருந்து சேவைகளை கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினர்.


Next Story