அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்


அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கைவிலங்குடன் கைதி தப்பி ஓட்டம்
x

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று கை விலங்குடன் கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று கை விலங்குடன் கைதி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருட்டு வழக்கு

நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு ஜெராக்ஸ் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு செல்போன் மற்றும் ரூ.1,500-ஐ மர்மநபர் திருடிச்சென்றார். இதுகுறித்து கடையின் உரிமையாளர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்த பழனிமுருகன் மகன் பரத் என்ற கார்த்திக் (வயது 19) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது.

தப்பி ஓட்டம்

இதையடுத்து போலீசார் கார்த்திக்கை நேற்று மதியம் கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது கார்த்திக் கையில் போலீசார் முன்னெச்சரிக்கையாக விலங்கை மாட்டினர். இருந்தபோதும் ஆஸ்பத்திரியில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கார்த்திக் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிவிட்டார்.

பரபரப்பு

இதனால் உடனடியாக மாநகரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். முக்கிய இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர்ந்து போலீசார் கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் கண்முன்னே கை விலங்குடன் கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story