கன்னியாகுமரியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்கியது தமிழர்களுக்கு பெருமை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு


கன்னியாகுமரியில் இருந்து  ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்கியது  தமிழர்களுக்கு பெருமை  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு
x

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்கியது தமிழர்களுக்கு பெருமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி நடைபயணத்தை தொடங்கியது தமிழர்களுக்கு பெருமை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கே.எஸ்.அழகிரி

பாதயாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில் கூறியதாவது:-

தலைவர் ராகுல் காந்தி வரலாற்று சிறப்புமிக்க நடை பயணத்தை தொடங்கியிருக்கிறார். இந்தியாவின் தேசத்தந்தை காந்தி தண்டி யாத்திரையை இப்படித்தான் தொடங்கினார். அப்போது அது சாதாரண விஷயமாக அன்றைக்கு இருந்த ஆங்கிலேயர்களுக்கு தெரிந்தது. ஆனால் அந்த யாத்திரையின் நோக்கம் என்பது மக்களின் உணர்வுகளை ஆளுகிறவர்களுக்கு தெரிவிப்பதற்காகவும், சிறந்த கொள்கையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காகவும் அந்த நடை பயணத்தை ஆரம்பித்தார். அந்த நடைபயணத்தின் முடிவு சர்வ வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தகர்ந்து சுக்குநூறானதை நாம் பார்த்தோம். அதே போன்று தான் இன்றும் நடக்க இருக்கிறது.

அற்புதமான கருத்து

ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பிரதமராக ஆகியிருக்க முடியும். ஆனால் அதை அவர் மறுத்தார். ஒன்றை பெறுவதில் என்ன மகிழ்ச்சி இருக்கிறதோ, அதை விட்டுக் கொடுப்பதில் அதை விடவும் பெரும் மகிழ்ச்சி இருக்கிறது என்பதை அவருைடய நடவடிக்கைகளின் மூலமாக நாம் அறிகிறோம்.

நடை பயணம் மூலம் இந்திய மக்களுக்கு சில உண்மைகளை தெளிவுபடுத்த விரும்புகிறோம். மகாத்மா காந்தி இந்திய எல்லைக்குள் வாழ்கிற அனைவரும் இந்தியர்கள் என்றார். இந்த நாட்டில் வாழ்கிறவர்களை இந்துவாகவோ, இஸ்லாமியராகவோ, கிறிஸ்தவராகவோ, பவுத்தனாகவோ அல்லது மொழியின் பெயராலோ, நிறத்தின் பெயராலோ நான் யாரையும் பார்க்க மாட்டேன், எல்லோருமே இந்தியர்கள் என்ற அற்புதமான கருத்தை சொன்னார்.

தமிழர்களுக்கு பெருமை

ஆனால் அன்றைக்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் என்ன சொன்னார்கள்? சனாதன தர்மத்தை அவர்கள் நிலைநாட்ட விரும்பினார்கள். அதை மகாத்மா காந்தி ஒத்துக்கொள்ளவில்லை. அதே கருத்தோடு தான் இன்று ராகுல்காந்தி நடை பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். அன்று மகாத்மா காந்தி ஆரம்பித்தார். இன்று ராகுல்காந்தி ஆரம்பித்துள்ளார். அதே கருத்தை மீண்டும் பதிவு செய்கிறார். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்த நாட்டை முன்னேற்றுவதற்காக வந்திருக்கிறோம். இந்திய எல்லைக்குள் வாழ்கிற அனைவருமே இந்தியர்கள் என்ற பிரகடனத்தை சொல்வதற்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க விஷயம் கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணத்தை தொடங்குவது தமிழர்களுக்கு பெருமை, தமிழக காங்கிரசுக்கு பெருமை.

இவ்வாறு அவர் கூறினார்.

ப.சிதம்பரம் பேச்சு

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:- இந்தியாவை இணைக்கும் இந்த நடை பயணத்தை கேலி செய்பவர்கள், கொச்சைப்படுத்தியவர்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதற்காக வருந்துவதோடு, அவர்களை மன்னிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியையும், பெருந்தலைவர் காமராஜரையும் வேண்டுகிறேன். 1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை வைத்தார். அந்த நேரத்தில் காந்தியடிகள் ஒரு மந்திரத்தை தந்தார். செய்து முடி அல்லது செத்துமடி என்றார். வெள்ளையனை வெளியேற்றும் வரை நம்முடைய பயணம் முடியாது, நம்முடைய முயற்சி நிற்காது என பெரும் அறைகூவலாக அவர் சொன்னார்.

இன்று ராகுல் காந்தியை பார்த்து பாரத் சோடோ என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்கிறேன். வெள்ளையனே வெளியேறு என்று காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான இந்திய மக்களும் சொன்ன போது அந்த போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை. மாறாக அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தினீர்கள். இன்று பாரதத்தை இணைப்போம் என்று நாங்கள் சொல்லும்போது இதையும் கொச்சைப்படுத்துகிறீர்கள். கேலி செய்கிறீர்கள். அன்று வெள்ளையன் வெளியேறக்கூடாது என்றதைப்போல இன்று இந்தியா ஒற்றுமையாக இருக்கக்கூடாது என்ற உங்களது எண்ணத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவை இணைக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும், சின்னாபின்னமாக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

பிளவுபடுத்தும் சக்தி

சுதந்திர போராட்டத்தில் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை வரலாறு சொல்லும். அதைப்போல இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்திலும் உங்களுக்கு பங்கு கிடையாது என்பதை நாங்கள் அறிவோம். இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை நமது பயணம் நிற்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story