கிணத்துக்கடவு லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை ரூ.10 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது
கிணத்துக்கடவு லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை ரூ.10 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு லட்சுமி நகரில் இருந்து வடசித்தூர் வரை ரூ.10 கோடியில் சாலை விரிவாக்க பணி தொடங்கியது.
குறுகலான சாலையால் விபத்து
கிணத்துக்கடவில் இருந்து லட்சுமி நகர் வழியாக வடசித்தூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக லட்சுமி நகர், கொண்டம்பட்டி, வடசித்தூர், மெட்டுவாவி, மன்றாம்பாளையம், பணப்பட்டி, கோதவாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை ஏற்கனவே 51/2 மீட்டர் அகலத்தில் இருந்தது.
இந்த சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் பள்ளி, கல்லூரி பஸ்கள் ஏராளமான இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் இந்த சாலை குறுகலாக உள்ளதால் பல இடங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர்.
ரூ.10 கோடியில் விரிவாக்கம்
இந்தநிலையில் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கியது. அதன்படி லட்சுமி நகர் பகுதியில் இருந்து வடசித்தூர் வரை 7.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5½ மீட்டர் அகலத்தில் உள்ள சாலையை 7 மீட்டர் ஆக விரிவாக்கம் செய்யும் பணி ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் தற்போது தொடங்கியுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துகள் குறையும்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- கிணத்துக்கடவு லட்சுமி நகர் - வடசித்தூர் வழியாக தினசரி பல்லடம், சுல்தான்பேட்டை நெகமம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை குறுகலாக உள்ளதால் தற்போது இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது அரசு இந்த சாலையை 7 அடி சாலையாக மாற்றி சாலை அகலப்படுத்துகிறது. இனி இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்காது. குறுகலான சாலைகள் விஸ்தரிப்பு செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் நன்றி. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.