மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் பயன் இல்லை- தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ரெயில்வே ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூரக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
பொள்ளாச்சி
மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்செந்தூரக்கு ரெயில் இயக்க கோரி மக்கள் பிரதிநிதிகள் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்றும், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருச்செந்தூர் ரெயில்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 5.08 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 6.40 மணிக்கு வந்து, திருச்செந்தூருக்கு 3.45 மணிக்கு சென்று அடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து 12.05 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8.40 மணிக்கு வந்து, பாலக்காட்டிற்கு 9.55 மணிக்கும் செல்கிறது.
இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரை காலியாக வருகிறது. இதனால் ரெயில்வேக்கு நஷ்டம் ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதன்பிறகும் திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கிடையில் மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி நிர்வாகங்கள் மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை. இதுகுறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-
மக்கள் பிரதிநிதிகள்
திருச்செந்தூரில் இருந்து மதுரை இயக்கப்பட்ட ரெயில் பின்னர் முருகனின் ஆறுபடை வீடுகளில் வரும் பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் ஆகிய கோவில்களுக்கு செல்லும் வகையில் பழனி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த ரெயில் பொள்ளாச்சி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை தடுக்க பாலக்காடு கோட்டத்தால் திருச்செந்தூர் ரெயில் பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ரெயிலில் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வரை கூட்டம் குறைவாக இருக்கும். மேலும் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு ரெயில் இயக்குவதால் ஒரு ஆண்டிற்கு எடுத்துக் கொண்டால் மொத்தம் ரூ.19 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியானது. இதற்கிடையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்க கோரி 7 எம்.பி.க்கள், 3 எம்.எல்.ஏ.க்கள், 20 ஊராட்சி நிர்வாகங்கள், 200 பயணிகள் நலச்சங்கத்தினர், 2 ஆயிரம் பேரிடம் இருந்து ஆன்லைன் மூலம் கையெழுத்து பெறப்பட்டது. ஆனால் அதன்பிறகும் ரெயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பஸ்களில் கூடுதல் கட்டணம்
பொள்ளாச்சி-போத்தனூர் ரெயில் வழித்தடம் கடந்த 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1932-ம் ஆண்டு பொள்ளாச்சி-பாலக்காடு ரெயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்த பொள்ளாச்சி-போத்தனூர் வழித்தடம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய உள்ளது. மேலும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பெரும்பாலும் அரசு, தனியார் பஸ்களையே நம்பி இருக்க வேண்டிய இருக்கிறது.
பண்டிகை காலங்களில் தனியார் பஸ்களில் ஒரு நபருக்கு ரூ.1000-த்துக்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் சாதாரண ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். திருச்செந்தூர் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கினால் ரெயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆனால் பாலக்காடு ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கோவையை புறக்கணிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். திருச்செந்தூர் ரெயில் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக தான் பாலக்காடு வழியாக மதுரைக்கு அமிர்தா எக்ஸ்பிரஸ் செல்கிறது. எனவே பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலை மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்கள்.