பண்ருட்டியில் இருந்து அரசூருக்கு அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
பண்ருட்டியில் இருந்து அரசூருக்கு அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுப்பேட்டை,
பண்ருட்டி மற்றும் புதுப்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள், அரசு பஸ்சில் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்கிறார்கள்.
ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காலை மற்றும் மாலையில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பண்ருட்டியில் இருந்து புதுப்பேட்டை மார்க்கமாக அரசூருக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் மாணவர்கள், படியில் தொடங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள்.
கூடுதல் பஸ் தேவை
படியில் பயணம்... நொடியில் மரணம்... என்ற வாசகம் பஸ்சில் ஒட்டப்பட்டிருக்கும். இருப்பினும் வேறு வழியின்றி மாணவர்கள் தினமும் காலை மற்றும் மாலையில் உயிரை பணயம் வைத்து பஸ்சில் பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.
உயிரிழப்பு ஏற்படும் முன் பண்ருட்டி-அரசூர் மார்க்கத்தில் கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கை ஆகும். மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?. பொருத்திருந்து பார்ப்போம்.