பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு


பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு-களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு
x

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கூடுதல் தண்ணீர் வருவதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கூடுதல் தண்ணீர் வருவதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மலைப்பகுதியில் மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நெல்லையில் நேற்று காலை 8 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று மேலும் 6.15 அடி உயர்ந்து 59.65 அடியாக இருந்தது. அணைக்கு நேற்றும் நீர்வரத்து அதிகமாக இருந்தது. வினாடிக்கு 3,299 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

அணையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 256 கன அடி தண்ணீரும், நேற்று முன்தினம் 307 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று தண்ணீர் திறப்பு 439 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

அதே நேரத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்காக திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. அந்த அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில், நேற்று 61 கன அடியாக குறைக்கப்பட்டது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.94 அடியாகவும், நீர்வரத்து 121 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் அடி உயர்ந்து 92.19 அடியாக உள்ளது.

தலையணையில் வெள்ளப்பெருக்கு

களக்காடு தலையணையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் வரத்து குறைந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே தலையணையில் பராமரிப்பு பணிகளும் தொடங்கின. இதையடுத்து களக்காடு தலையணை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை நீடிப்பதால், தண்ணீரின் வரத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தலையணைக்கு செல்லவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் தணிந்ததும் சுற்றுலா பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் தெரிவித்தார்.

கைப்பிடி கம்பிகள் அமைப்பு

களக்காடு தலையணையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க பாதுகாப்பு நலன் கருதி பாறைகள், மண் திட்டுகள் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பணைக்கு கீழே செல்ல படிக்கட்டுகள், பாதுகாப்புக்காக கைப்பிடி கம்பிகள், சிமெண்டு தளமும் போடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக சவுகரியம் செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

நீர்மட்டம் உயர்வு

தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் குண்டாறு அணை நேற்று முன்தினம் நிரம்பியது. நேற்று அந்த அணைக்கு வினாடிக்கு 88 கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக மறுகால் பாய்ந்து செல்கிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 67 அடியில் இருந்து 71 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு 79 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 167 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 84 கன அடியாகவும், வெளியேற்றம் 3 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 33 அடியாக உள்ளது.



Next Story