சத்தியில் இருந்து தாளவாடிக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தம் மலைக்கிராம மக்கள் அவதி
மலைக்கிராம மக்கள் அவதி
சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரவு நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் தாளவாடி மலைக்கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.
இரவு நேர போக்குவரத்துக்கு தடை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக செல்லும் சரக்கு வாகனங்களில் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதால் கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்தார். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் காரணமாக இந்த உத்தரவை வனத்துறை கடைபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையே உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழக்கும் வனஉயிரினங்களை காப்பாற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவை பிப்ரவரி 10-ந் தேதி அமல்படுத்த வேண்டும் என்றும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.
அரசு பஸ் நிறுத்தம்
உள்ளூர் பொதுமக்கள் மட்டும் அடையாள அட்டையை காண்பித்து இரவு நேரத்தில் பயணித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் தமிழக அரசு பஸ் நிறுத்தப்பட்டது.
இதனால் தாளவாடி செல்ல முடியாமல் மலை கிராம மக்கள் சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலேயே விடிய, விடிய காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தாளவாடி மலைகிராம மக்கள் கூறும்போது, 'திம்பம் மலைப்பாதையில் இரவு 9 மணி வரை பஸ்கள் செல்லலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலைக்கிராம மக்கள் அவதி
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இரவு 8.30 மணி அளவில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு புறப்படும் அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் நாங்கள் வெளியூர் மற்றும் மருத்துவ சேவைக்காக சென்று விட்டு வீடு திரும்ப முடியாமல் விடிய விடிய சத்தியமங்கலம் பஸ் நிலையத்திலேயே காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இரவு 8.30 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்சை மீண்டும் விட வேண்டும் எனவும், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது போல் திம்பம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் இரவு நேரத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.