தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்


தூத்துக்குடியில் இருந்து  இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பீடி இலை பறிமுதல்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலையை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான பீடி இலையை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலை கடத்தலும் அதிகரித்து உள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி கடலோர காவல்படையினர் ரோந்து கப்பல் வஜ்ரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பீடி இலை

அப்போது, மணப்பாட்டில் இருந்து 40 கடல்மைல் தொலைவில் சந்தேகப்படும்படியாக ஒரு படகு நின்று கொண்டு இருந்தது. அதில் கடலோர காவல்படையினர் சோதனை செய்தனர்.

அப்போது, படகில் சாக்கு மூட்டைகளில் சுமார் 3½ டன் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. படகில் இருந்த காட்வின், பிச்சையா, மில்டன், டார்ஜன், ரட்சகர், கிங் ஆகிய 6 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ.30 லட்சம்

பின்னர் பீடி இலை, படகு மற்றும் 6 பேரையும் தூத்துக்குடிக்கு அழைத்து வந்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க கடலோர காவல்படையினர் நடவடிக்கை எடுத்தனர். பிடிபட்ட பீடி இலையின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.


Next Story