பொதுமக்களுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள்
தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் அனைவருக்கும் பழ மரக்கன்றுகள்
போடிப்பட்டி,
மடத்துக்குளம் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் அனைவருக்கும் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளதாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மானிய விலை
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு மானிய திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது விவசாயிகள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பழ மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. எங்கேயோ எப்போதோ பறித்த பழங்களை சாப்பிடுவதை விட நமது வீட்டில் அல்லது தோட்டத்தில் நாமே விளைவித்த பழங்களை உண்பது மிகவும் ஆனந்தம் தரும் விஷயமாகும். அந்தவகையான பழங்களின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மூலம் 5 வகையான பழச்செடி தொகுப்புகளை மானியத்தில் வழங்குகிறது.இந்த பழச்செடிகள் தொகுப்பில் மாதுளை, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, சீத்தா ஆகிய 5 வகையான பழச் செடிகள் உள்ளது. ரூ. 200 விலை உள்ள இந்த பழச்செடிகள் தோட்டக்கலைத்துறை மூலம் 75 சதவீத மானிய விலையில் ரூ. 50-க்கு வழங்கப்பட உள்ளது.
500 பேருக்கு
பழச் செடிகளை வீட்டின் புறப்பகுதிகளில் மற்றும் வீட்டை சுற்றி இட வசதி உள்ள இடங்களில் நடவு செய்து கொள்ளலாம். வீடுகளில் போதிய இட வசதி இல்லையென்றால் வழங்கப்படும் பழச் செடிகளை பயனாளிகளின் வயல்களிலும் நட்டு பராமரிக்கலாம். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக ஒரு பழச்செடி தொகுப்பு மட்டும் வழங்கப்படும். மடத்துக்குளம் வட்டாரத்தில் முதல் கட்டமாக முதலில் வரும் 500 நபர்களுக்கு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட தாந்தோணி, மெட்ராத்தி கிராமங்களுக்கு தலா 250 நபர்கள் வீதம் முன்னுரிமை அளித்து பழச்செடி தொகுப்புகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.ஆதிதிராவிட குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பழ நாற்றுக்கள் தோட்டக்கலைத் துறை மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மட்டுமல்லாமல் புதிதாக தேவைப்படுபவர்களும் ஆதார் நகல் மட்டும் கொடுத்து செடிகளை பெற்றுக் கொள்ளலாம்.தாந்தோணி, மெட்ராத்தி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பழச் செடிகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன்-9659838787,நித்யராஜ்-6382129721 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.