பழங்கள் விலை கிடுகிடு உயர்வு


பழங்கள் விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

விழுப்புரம்

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் எப்போதுமே பொதுமக்களை நேரடியாக பாதிக்கக்கூடியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய காய்கறி, மளிகை பொருட்களின் விலை ஒவ்வொரு நாளும் விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்து கொண்டே செல்வது ஏழை, எளிய, நடுத்தர மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பொதுமக்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

பழங்களின் விலை உயர்வு

இந்நிலையில் காய்கறி, மளிகைப்பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து பழங்களின் விலையும் தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தித்திக்கும் இனிப்பு கொண்ட பழங்களின் விலை உயர்வு என்பது ஏழை, எளிய மக்களுக்கு கசப்பாகவே அமைந்துள்ளது.

விழுப்புரம் சந்தைக்கு பிற வெளிமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரக்கூடிய பழங்களின் சீசன் முடிவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக வரத்து குறைந்துள்ளதால் கடந்த 2 வாரத்தை விட தற்போது ஒவ்வொரு பழங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது.

விலை விவரம்

அதன்படி கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ ஆப்பிள் ரூ.160 முதல் ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மாம்பழங்களில் ஒட்டுரகம் கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.50-க்கும், பங்கனப்பள்ளி கிலோ ரூ.50-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.70-க்கும், ரூ.40-க்கு விற்ற செந்தூரா ரூ.70-க்கும், ரூ.40-க்கு விற்ற ருமேனியா ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆரஞ்சு தற்போது ரூ.30 அதிகரித்து ரூ.120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதுபோல் மாதுளை கிலோ ரூ.140-க்கு விற்ற நிலையில் ரூ.60 அதிகரித்து ரூ.200 ஆகவும், ரூ.150-க்கு விற்ற அத்திப்பழம் ரூ.50 அதிகரித்து ரூ.200 ஆகவும், ரூ.150-க்கு விற்ற டிராகன், பிளம்ஸ் ஆகிய பழங்கள் ரூ.50 அதிகரித்து ரூ.200 ஆகவும், ரூ.300-க்கு விற்ற ரம்புட்டான் ரூ.100 அதிகரித்து ரூ.400 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுதவிர ரூ.60-க்கு விற்ற சாத்துக்குடி தற்போது ரூ.80-க்கும், ரூ.80-க்கு விற்ற திராட்சை ரூ.100-க்கும், ரூ.20-க்கு விற்ற கிர்னி ரூ.50-க்கும், ரூ.20-க்கு விற்ற தர்பூசணி ரூ.40-க்கும், வாழைப்பழங்களில் ஒரு டஜன் கற்பூரவள்ளி ரகம் ரூ.40-க்கு விற்ற நிலையில் தற்போது ரூ.50-க்கும், ரூ.30-க்கு விற்ற பூம்பழம் ரூ.40-க்கும், ரூ.40-க்கு விற்ற மோரிஸ் ரூ.50-க்கும், ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு செவ்வாழைப்பழம் ரூ.15-க்கும், ரூ.40-க்கு விற்ற ஒரு அன்னாசிப்பழம் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உடல் ஆரோக்கியம்

காய்கறி, மளிகைப்பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து பழங்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு மேலும் எரிச்சலை தந்தாலும் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் பெரும் பங்கு வகிப்பதால் அதன் விலை உயர்வை பொருட்படுத்தாமல் வேறு வழியின்றி பொதுமக்கள் பலரும் வாங்கிச்சென்ற வண்ணம் உள்ளனர்.


Next Story