தேர்வு எழுத முடியாததால் விரக்தி: மருத்துவ மாணவி விஷம் குடித்து தற்கொலை
தேர்வு எழுத முடியாததால் விரக்தி அடைந்த மருத்துவ மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை,
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுகா வடலூர் ஓ.பி.ஆர். நகரை சேர்ந்தவர் சங்கர். இவர் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அதிகாரியாக உள்ளார். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகள்கள் யோகேஸ்வரி (வயது 23), தாரணி.
இதில் யோகேஸ்வரி நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அங்குள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.
தாயின் இழப்பு
கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு யோகேஸ்வரியின் தாயார் சித்ரா உயிர் இழந்தார். இதனால் மனமுடைந்த யோகேஸ்வரி தனது தாயின் இழப்பை தாங்க முடியாமல் அதிக அளவில் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால் அவர் கல்லூரிக்கு சரிவர செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், கல்லூரி வருகை நாட்களும் குறைந்தது. இதன் காரணமாக யோகேஸ்வரி இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மாணவி தற்கொலை
தாய் இறந்த துக்கத்திலும், தேர்வு எழுத முடியாத விரக்தியிலும் யோகேஸ்வரி தான் தங்கி இருந்த விடுதி அறையில் நேற்று முன்தினம் விஷம் குடித்துள்ளார். பின்னர் அவரே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் யோகேஸ்வரி பரிதாபமாக உயிர் இழந்தார்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.