மனுக்களுக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தி:தீக்குளிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது


மனுக்களுக்கு தீர்வு கிடைக்காததால் விரக்தி:தீக்குளிக்க முயன்ற சமூக ஆர்வலர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

தேனியில் மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் தீக்குளிக்க முயன்ற சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனியை சேர்ந்தவர் ராஜதுரை. சமூக ஆர்வலரான இவர் பல்வேறு பொது பிரச்சினைகள் தொடர்பாக அரசு துறைகளில் மனுக்கள் கொடுத்து வந்தார். நேற்று மாலை இவர், தேனி நேரு சிலை சிக்னல் பகுதிக்கு வந்தார். அப்போது அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது ராஜதுரை கூறுகையில், 'தேனி ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும். கொட்டக்குடி ஆற்றில் தனிநபர் பாலம் கட்டுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு பொது பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும், அரசுத்துறை அலுவலகங்களிலும் மனுக்கள் கொடுத்துள்ளேன். இதுவரை எந்த மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றேன்' என்றார். இதையடுத்து தீக்குளிக்க முயன்றதாக போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மண்எண்ணெய் ஊற்றியதால் ஏற்பட்ட உடல் எரிச்சலுக்கான சிகிச்சைக்காக அவரை தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.


Next Story