காதலிக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
சேலம்,
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 27). இவர், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொடுக்க பெரியவர்கள் மூலம் பிரகாஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீடு கட்டி முடியுங்கள், அதன்பிறகு பார்க்கலாம் என காதலியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இதனால் சொந்தமாக வீடு கட்டும் பணியில் பிரகாஷ் ஈடுபட தொடங்கினார். மேலும் காதலியை திருமணம் செய்து வைக்க பிரகாஷ் தனது பெற்றோரிடம் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர்கள் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு இடத்தில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் மதியம் பூச்சிக்கொல்லி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.