பணகுடியில் முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்"- தனுஷ்கோடி ஆதித்தன் தகவல்
“நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்” என முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
வள்ளியூர்:
"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் தலைவர்களின் முழுஉருவ வெண்கல சிலைகள் திறக்கப்படும்" என முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தெரிவித்தார்.
முழு உருவ வெண்கல சிலை
நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழிச்சாலை சந்திப்பில் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜி.கே.மூப்பனார் ஆகிய முப்பெரும் தலைவருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் சிலை அமைக்கப்பட்ட இடத்தை முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
தனுஷ்கோடி ஆதித்தன் பேட்டி
பின்னர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணகுடி நான்கு வழிச்சாலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முதுபெரும் தலைவர் ஜி.கே.மூப்பனார் ஆகியோருக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை சிலை அமைப்பு குழுவைச் சேர்ந்த மாநில செயலாளர் ஜோதி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை வைத்து திறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கான காலம் வெகு விரைவில் அமைய உள்ளது.
வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பணகுடியில் அமைக்கப்பட்டுள்ள முப்பெரும் தலைவர்களின் சிலைகளை ராகுல் காந்தியை வைத்து திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சிலை திறப்பு விழா அன்று மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. அதில் ராகுல் காந்தி பேச இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சிலை அமைப்பு குழு தலைவரும் மாநில செயலாளருமான ஜோதி, மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், வழக்கறிஞர் பிரிவு இணைத்தலைவர் மகேந்திரன், மீனவர் அணி மாவட்ட தலைவர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.