திருச்சியில் பொதுமக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சி


திருச்சியில் பொதுமக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சி
x

திருச்சியில் பொதுமக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி

தினமும் காலை எழுந்த உடன் வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் வகையில் சமீபகாலமாக தமிழகத்தில் சென்னை, கோவை, ஊட்டி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் போலீசார் சார்பில் மனமகிழ் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

அதேபோல் திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி கோர்ட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள மாணவர் சாலையில் திருச்சி மாநகர போலீசார், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'மனமகிழ் நிகழ்ச்சி' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

இந்நிகழ்ச்சியில் டிரோன் ஷோ, குழந்தைகளுக்கான விளையாட்டு திருவிழா, மூத்த குடிமக்களுக்கான நிகழ்ச்சி, செல்லப்பிராணிகள் கண்காட்சி, ஆட்டம், பாட்டம், உடல் பரிசோதனைகள், உணவுகள் விற்பனையகம் மற்றும் காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி, போலீஸ் இசை குழு, காவல்துறை துப்பறியும் மோப்ப நாய் படை கண்காட்சி மற்றும் பயனுள்ள பொருட்கள் விற்பனையகம் என 30-க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கல்லூரி மாணவர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் திருச்சி மாநகர பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதைப்பொருள் பழக்க வழக்கங்களில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story