கிருஷ்ணகிரியில் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா


கிருஷ்ணகிரியில் வள்ளலார் 200-வது முப்பெரும் விழா
x
தினத்தந்தி 11 Jun 2023 7:00 PM GMT (Updated: 12 Jun 2023 2:36 AM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா நடந்தது. இதில் சமரச சுத்த சன்மார்க்க பெரியோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முப்பெரும் விழா

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் 200-வது ஆண்டு தொடக்கம், தருமச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு, ஜோதி தரிசன 152-வது ஆண்டு சேர்ந்து வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலை நிகழ்ச்சிகள்

விழாவை முன்னிட்டு காலை 6 மணியளவில் வள்ளலாரின் அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் சுத்த சன்மார்க்க அன்பர்களால் பாடப்பட்டது. பின்னர் சன்மார்க்க சங்க கொடி ஏற்பட்டது. தொடர்ந்து 200-வது முப்பெரும் விழாவையொட்டி நடந்த பேரணியை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி பஸ் நிலையம் அருகில் துவங்கி, ராயக்கோட்டை சாலை மேம்பாலம் வழியாக அரசு மகளிர் கல்லூரியில் நிறைவடைந்தது. மேலும் பல்வேறு யோகாசன செயல்முறை பயிற்சி மற்றும் வீணை இசை, மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிறைவாக ஜோதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

சான்றிதழ்கள்

முன்னதாக சமரச சுத்த சன்மார்க்க பெரியோர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து வள்ளலார் கண்ட ஞான மூலிகைகளான கருப்புகவுணி பிஸ்கட், கரிசலாங்கண்ணி லேகியம், பனைபழம் அல்வா, நெல்லிகனி இனிப்பு, அகத்தி விதை தேன் என 21 வகையான மூலிகை பொடி, பிரண்டை இட்லி பொடி, வசம்பு பொடி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரஜினி செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நவாப், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story