புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கும்பகோணத்தில், அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
கும்பகோணம்;
தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என கும்பகோணத்தில், அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
ஓய்வு அறை கட்டிடம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வெடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஓய்வு அறை கட்டிடத்தின் திறப்பு விழா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஓய்வு அறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குளிர் சாதன வசதி
தி.மு.க. ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும் என்கிற வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக அலுவலகங்களில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்யப்படும்.
2 ஆயிரம் பஸ்கள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய பஸ்கள் வாங்கப்பட்டதும் புதிய வழித்தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கவும் நவக்கிரக தலங்களை இணைத்து பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கும்பகோணம் போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிதாக டிரைவர் கண்டக்டர்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
பணியாளர்கள் நியமனம்
இந்த அரசாணையின்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப துறையுடன் சேர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.