மாமல்லபுரத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகள் - போலீஸ் பாதுகாப்பு தீவிரம்...!
சென்னை வந்துள்ள "ஜி-20" நாடுகளின் பிரதிநிதிகள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்ப்பதற்காக வருகிறார்கள்.
மாமல்லபுரம்,
சென்னை வந்துள்ள "ஜி20" நாடுகளின் பிரதிநிதிகள், புராதன சின்னங்களை சுற்றிப் பார்ப்பதற்காக மாமல்லபுரம் வருகிறார்கள். இதையடுத்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி சாய் பிரணீத் உத்தரவின் பெயரில், மாமல்லபுரம் டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் கண்காணிப்பில் வெளி மாவட்ட போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதிநிதிகள் செல்லும் வழித்தடம், புராதன சின்னங்கள், உணவருந்தும் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளை போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளிலும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் எவரேனும் புதிதாக தங்கி இருக்கிறார்களா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புராதன சின்னங்கள் எதிரே உள்ள சாலையோர கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு மாமல்லபுரத்தில் "ட்ரோன்" கேமரா பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.