ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி கரூரில் தயாரான கோட்-ஜாக்கெட்டை அணிந்து பங்கேற்பு
ஜப்பானில் நடந்த ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கரூரில் தயாரான கோட்-ஜாக்கெட்டை அணிந்து பங்கேற்றார்.
ஜி-7 மாநாடு
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் கடந்த 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடந்தது.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்றனர். ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் கரூர் ரங்கா பாலிமர் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோட்-ஜாக்கெட்டை பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்தார்.
உலக அளவில் டிரன்ட்
இதுகுறித்து கரூரை சேர்ந்த ரங்கா பாலிமர் நிறுவன முதன்மை இயக்குனர் செந்தில்சங்கர் கூறியதாவது:- நாங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து பல நிறத்தில் ஜவுளிகளையும், அழகிய ரெடிமேட் ஆடைகளையும் உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.
காலிபாட்டில்களை கொண்டு எங்களால் உருவாக்கப்பட்ட அழகிய சியான் புளூ நிறத்திலான பெட் பாட்டில் ஜவுளியில் இருந்து தைக்கப்பட்ட கோட்-ஜாக்கெட்டை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணிந்து கடந்த பிப்ரவரி மாதம் லோக்சபாவுக்கு வந்து பெருமை சேர்த்தார். அது அப்போது இந்தியா மட்டுமின்றி உலக அளவில் டிரன்ட் ஆனது.
பெருமை
இந்நிலையில் ஜப்பானில் தற்போது நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் நாங்கள் அளித்த 9 நிறத்திலான பெட் பாட்டிலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜவுளியில் மீண்டும் சந்தன நிறத்திலான கோட்-ஜாக்கெட்டை உலக தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்து சென்றது எங்களுக்கு பெருமையாக உள்ளது.
குறிப்பாக சர்வதேச அரங்கில் எங்கள் தயாரிப்பிலான ஆடையை பிரதமர் நரேந்திர மோடி அணிந்து சென்றது எங்கள் நிறுவனத்திற்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும், கரூருக்கும் பெருமை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.