ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் சுற்றுலா வருகை எதிரொலி: மாமல்லபுரம் புராதன சின்னங்களில் அணு விஞ்ஞானிகள் கதிர்வீச்சு ஆய்வு


ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் சுற்றுலா வருகை எதிரொலி: மாமல்லபுரம் புராதன சின்னங்களில் அணு விஞ்ஞானிகள் கதிர்வீச்சு ஆய்வு
x

ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் சுற்றுலா வருகை எதிரொலியாக மாமல்லபுரம் புராதன சின்னங்களில் அணு விஞ்ஞானிகள் கதிர்வீச்சு ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு

ஜி 20 மாநாடு தொடர் பான பிரதிநிதிகள் வருகிற 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 1, 2 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் அமெரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 100 விருந்தினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் கலந்து கொள்ள வரும் அவர்கள் வருகிற 1-ந்தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்க்க சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாமல்லபுரத்திற்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.

புராதன சின்னங்களில் புல்வெளிகள் அமைத்தல், அழகிய மலர் செடிகள், நடைபாதைகள் அழகான முறையில் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொல்லியல் துறை சார்பில் நடந்து வருகின்றன.

இதற்கிடையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி பிரிவு, மாமல்லபுரத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தின் அருகாமையில் அமைந்து உள்ளது. இதனால் கூட்டத்து க்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் உடல்நிலை, அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாமல்லபுரத்தில் கதிர்வீச்சு அபாயம் உள்ளதா? என்பதை கதிர்வீச்சு கருவி மூலம் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்குமாறு அணுசக்தி துறை உத்தரவிட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவினர் இணைந்து ஒரு குழுவாக மாமல்லபுரம் வந்தனர். அவர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு நடந்து சென்று கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வீசும் காற்றின் மூலம் இந்த புராதன பகுதிகளில் உள்ள சிற்பங்கள், புல்வெளி மைதானங்கள், நடைபாதைகள், நுழைவு சீட்டு மையங்கள் போன்றவற்றில் கதிர்வீச்சு பரவி உள்ளதா? என கதிர்வீச்சு பரவலை துல்லியமாக கண்டுபிடிக்கும் ரேடார் கருவி, ரேடார் மீட்டர் மூலம் ஆய்வு செய்தனர். பிறகு கதிர்வீச்சு ஆய்வு குறித்த முழு விவர அறிக்கையை தமிழக அரசுக்கும், மத்திய அணுசக்தி துறைக்கும் கதிர்வீச்சு ஆய்வு குழுவினர் அனுப்பி வைத்தனர்.


Next Story